ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கரடி நடமாட்டம்!
கண்காணிப்பு கேமராவில் பதிவான கரடி
நீலகிரி மாவட்டம் ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. நீலகிரியில் கரடி, காட்டுமாடு, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக காட்டுமாடு, கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஊட்டி தமிழகம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 2 கரடிகள் புகுந்தது. ஆட்சியர் முகாம் அலுவலக சுற்றுச்சூழல் இருந்த கரடிகள் மெதுவாக குதித்து நடந்து, முகாம் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிகின்றன. இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அந்தக் கரடிகள் தமிழகம் சாலை வழியாக வெளியே சென்று வனப்பகுதிக்குள் சென்று விட்டன. கரடிகள் புகும் இந்த வீடியோ காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அந்தப் பகுதி பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,"வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கரடிகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதி முழுவதும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்," என்றனர்.