சிறந்த பள்ளி: லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி தேர்வு

சிறந்த பள்ளி: லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி தேர்வு
விருதுபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியை

தஞ்சாவூர் மாவட்டத்தில், சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி பாராட்டினார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளியில் 135க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆசிரியர்களின் கடின உழைப்பு, தீவிர அர்ப்பணிப்பால் இங்கு படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து பலரின் பாட்டுகளை பெற்று வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கற்பித்தலுக்கு தேவையான புரஜெக்டர், ஸ்மார்ட் டி.வி, கணினி, பிரிண்டர் போன்ற பொருட்களை வழங்கியதுடன், புரவலர் நிதியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கி உள்ளனர்.

ஆசிரியர்களின் கற்பித்தல், மாணவர் சேர்க்கை, கழிப்பறை தூய்மை, கட்டிட அமைப்பு, பள்ளி வளாக தூய்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இப்பள்ளி தஞ்சை மாவட்ட தூய்மை பள்ளிக்கான விருதையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து அதற்கான கேடயம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறந்த பள்ளிகளாக மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.

இதில் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி தஞ்சை மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மஞ்சுளா,

பள்ளி ஆசிரியர் மைதிலி, வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி ஆகியோரிடம் விருது வழங்கி பாராட்டினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, பாடநூல் கழக தலைவர் லியோனி மற்றும் பலர் உடனிருந்தனர். சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை இப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story