பகவதி அம்மன் கோவிலில் 9மணி நேரத்துக்கு பின் நடை திறப்பு

பகவதி அம்மன் கோவிலில் 9மணி நேரத்துக்கு பின்  நடை திறப்பு

கோப்பு படம்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவதும், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சந்திர கிரகணத்தை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று இரவு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கே நடை அடைக்கப்பட்டது.

சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டப்பட்டு துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. சந்திர கிரகணத்தினால் பகவதி அம்மன் கோவில் நடை 9 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தது. சந்திர கிரகணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு அம்மனுக்கு பரிகாரபூஜைகள் மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு பகவதி அம்மனுக்கு வழக்கம்போல் உள்ள பூஜைகள் தொடர்ந்து நடத்தப் பட்டது. கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

Tags

Next Story