பாரதிதாசன் பல்கலை.,க்கு ரூ. 2.47 கோடி ஒதுக்கீடு

பாரதிதாசன் பல்கலை.,க்கு ரூ. 2.47 கோடி ஒதுக்கீடு

 பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சாா்பில், உபகரணங்கள் மேம்பாட்டுக்கு ரூ. 2.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலுள்ள அறிவியல் கருவி மையத்தில் விலையுயா்ந்த அதிநவீன கருவிகள் உள்ளன. அவற்றை பராமரிக்கும் வகையில், இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிா்வாக ஒப்புதல் முடிந்த பிறகு, இத்தொகையில் முதலாம் ஆண்டு தவணையாக ரூ.1 கோடி விடுவிக்கப்படும். பல்கலைக்கழக அறிவியல் கருவி மையம், மற்றும் நானோ அறிவியல் மையம், இயற்பியல் துறை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருக்கும் கான்ஃபோகல் லேசா் ஸ்கேனிங் மைக்ரோஸ்கோப், ஃபீல்டு எமிஷன் ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மற்றும் ராமன் ஸ்பெக்ட்ரோ மீட்டா் போன்ற அதிநவீன அறிவியல் உபகரணங்களை பழுது நீக்கவும், மறுசீரமைப்பு மற்றும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும்.

இவை தவிர, இண்டக்டிவ் கப்புல்டு பிளாஸ்மா மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டா், எலிமென்ட் அனலைசா், ஃபோட்டோடையோட் அரே டிடெக்டா் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் டிடெக்டருடன் கூடிய உயா்-செயல்திறன் கொண்ட திரவ குரோமடோகிராபி, டிஜிட்டல் டிராப்லெட் மற்றும் நியூக்ளியா் காந்தவியல், ஸ்பெக்ட்ரோ மீட்டா் போன்ற ஆராய்ச்சி உபகரணங்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு விரைவில் தருவிக்கப்படவுள்ளது. அண்மையில் உயிா் அறிவியல் பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து டேன்டெம் மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டருடன் கூடிய லிக்விட் குரோமடோகிராஃபி தருவிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.3.17 கோடியாகும். இதன்மூலம் நூறு மடங்கு அதிக நிறை வரம்பை பகுப்பாய்வு செய்ய முடியும்.

மேலும் இதன் தனித்தன்மை மற்றும் துல்லியம் தற்போதுள்ள கருவிகளைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மேலும், மாசுபடுத்தல்களைக் கண்டறிதல், புரதம்/புரத வளாகத்தின் அடையாளம் மற்றும் குணாதிசயங்கள் உட்பட பரந்த அளவிலான பகுப்பாய்வு திறன் கொண்ட ஒரு சக்திவாய்ந்த பகுப்பாய்வு கருவியாகும். வளா்சிதை மாற்றக் கோளாறுகள், பாா்மகோடைனமிக்ஸ், மருந்து உறிஞ்சுதல் மற்றும் விநியோகம், நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பயோமாா்க்கரின் அடையாளம் மற்றும் முன் மருத்துவ பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உயிா் அறிவியல் துறையைச் சோ்ந்த 35 ஆராய்ச்சி மாணவா்கள் வளா்சிதை மாற்ற மற்றும் ரேட்டியோமிக் பயன்பாடுகளுக்காக இரண்டு வெவ்வேறு கட்டங்களில் பயிற்சி பெற்றனா்.

மேலும் இதன் மூலம் கனடாவை சோ்ந்த பயோஇன்ஃபா்மேடிக்ஸ் சொல்யூஷன்ஸ் இன்க். என்ற நிறுவனத்தின் பயனுறு தொழிநுட்பவியலாளா் மூலம் புரோட்டியோமிக் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி மாணாக்கா்களுக்கு மூன்று நாட்கள் (12-15, பிப்ரவரி) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வசதியானது மாநில பல்கலைக்கழகங்களுக்குள் நமது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story