மரகத பூஞ்சோலை அமைக்க பூமி பூஜை

மரகத பூஞ்சோலை அமைக்க பூமி பூஜை
பூமி பூஜை

தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில், வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டங்கள் தோறும், வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. அதன்பின், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை மற்றும் கடமலைப்புத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பொது இடத்தில், 2.50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம், இரண்டு ஊராட்சிகள் சேர்ந்து, வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மரகத பூஞ்சோலை அமைப்பதற்கான பூமி பூஜையில், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி தலைவர் சாவித்திரி, அச்சிறுபாக்கம் வன அலுவலர் வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அச்சிறுபாக்கம் வன அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது: வனத்துறை வாயிலாக 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண்ணின் தன்மைக்கேற்ப மரக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, 625 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. ஆழ்துளை கிணறு அமைத்து, பூஞ்சோலையை சுற்றி கம்பி வேலி அமைத்து, இரண்டு ஆண்டுகள் வனத்துறையின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பின், வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படும்.

Tags

Next Story