பாரபட்சம் காட்டும் அதிமுக தலைவர் - தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மனு

பாரபட்சம் காட்டும் அதிமுக தலைவர் - தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மனு

 தி.மு.க. வார்டு உறுப்பினர்கள்

அதிமுகவை சேர்ந்த மேட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக கூறி தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் 4 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த மேட்டுப்பட்டி பஞ்சாயத்து 2 -வது வார்டு தியாகராஜன், 3-வது வார்டு வளர்மதி, 6-வது வார்டு கவிதா பழனியப்பன், 7-வது வார்டு அனுசியா பாஸ்கரன் ஆகியோர்கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- மேட்டுப்பட்டி பஞ்சாயத்தில் 7 தி.மு.க. வார்டு உறுப்பினர்களும், 3 பேர் அ.தி.மு.க. உறுப்பினர்களும் உள்ளனர். தலைவராக சந்திரா என்பவர் உள்ளார். எங்கள் பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எங்களிடம் மக்கள் கோரிக்கை வைத்தும் அடிப்படை வசதிகளை எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. அடிப்படை வசதி கேட்டு 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் சந்திராவிடம் கேட்டு வந்தோம். ஆனால் நாங்கள் தி.மு.க. வார்டு உறுப்பினராக இருப்பதால் எங்கள் வார்டுகளுக்கு செய்யாமல் பாரபட்சம் செய்கிறார் . மேலும் பஞ்சாயத்தில் தலைவரின் கணவர் ராஜசேகர் என்பவரின் தலையீடும் அதிகமாக உள்ளது. வார்டு உறுப்பினராக இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்கள் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர தலைவருக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்ய மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story