சேலத்தில் பெரிய வெங்காயம் விலை உயர்வு
பெரிய வெங்காயம்
சமையலுக்கு அத்தியாவசிய காய்கறிகளில் தேவையான ஒன்றாக வெங்காயம் உள்ளது. இதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டுமே மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.45 வரை விற்பனையானது.
தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. அதாவது, நேற்று உழவர் சந்தைகளில் தரத்திற்கு ஏற்ப பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.60 வரை விற்பனையானது. வரத்து குறைந்தது இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, மராட்டியம், மத்தியபிரதேசம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.
அறுவடை காலங்களில் 300 முதல் 400 டன் வரை பெரிய வெங்காயம் கொண்டு வரப்படும். தற்போது அங்கு அறுவடை குறைந்துள்ளதால் அதன் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 100 முதல் 200 டன் வரை தான் பெரிய வெங்காயம் வருகிறது. மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் பெரிய வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. வரத்து அதிகமாக கொண்டு வந்தால் தான் பெரிய வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.