திருப்பூரில் பீகார் மாநில வாலிபர் குத்தி கொலை: சிறுவன் உட்பட 3பேர் கைது

திருப்பூரில் பீகார் மாநில வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர் உட்பட மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பீகார் மாநில வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட மூன்று பேர் கைது! திருப்பூர்,மே 16- பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் வந்து காலேஜ் ரோடு பகுதியில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கி இருந்து அருகாமையில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பணி முடித்துக் கொண்டு காலேஜ் ரோட்டில் உள்ள பாப்புஸ் பேக்கரி அருகில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக மூன்று பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அப்போது அந்த கும்பல் ஆகாஷ் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். ஆனால் ஆகாஷ் குமார் செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆகாஷ் குமாரின் வயிற்று பகுதியில் குத்தி செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். ஆகாஷ் குமார் ரத்தம் வழிந்தோடும் நிலையில் ஹாஸ்டலுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து ஹாஸ்டலில் தங்கி உள்ளவர்களின் உதவியோடு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார். கொலை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் , கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வட மாநில தொழிலாளர்கள் கல்லூரி சாலையில் தங்கள் பணி புரியும் நிறுவன வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கலைந்து போகச் செய்தனர். கொலைச் சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவின் பேரில் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. உயிரிழந்த ஆகாஷ் குமாரின் உடல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சொல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கொலை சம்பவம் நடந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களைக் கொண்டு விசாரணையை துவக்கினர்.

இதில் சாமுண்டிபுரத்தில் பதுங்கி இருந்த பிரவீன் குமார் , பாண்டியராஜன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்பு நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். விசாரணைக்குப் பின்பே கொலைக்கான முழு சம்பவம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story