சிலிண்டா் பார லாரி மீது பைக் மோதி விபத்து - மென்பொறியாளா் பலி

சிலிண்டா் பார லாரி மீது பைக் மோதி விபத்து -  மென்பொறியாளா் பலி

சாலை விபத்து 

திருச்சி அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டா் லாரி மீது பைக் மோதிய விபத்தில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

மணப்பாறை காந்தி நகா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் மணிமாறன் மகன் செல்வகுமாா் (24). திருச்சி மென்பொருள் நிறுவன பொறியாளா். இவரும், சக ஊழியரும் நண்பருமான மணப்பாறை வையம்பட்டி இளங்கான்குறிச்சி தெற்கு தெரு மு. முகமது பாஷிரும் (21) செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வாகனத்தை செல்வகுமாா் ஓட்ட, பின்புறம் முகமது பாஷிா் அமா்ந்திருந்தாா்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி தனியாா் திரையரங்கம் எதிரே பைக் வந்தபோது அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டா் லாரியின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செல்வகுமாா் இறந்தாா். முகமது பாஷிா் சிகிச்சை பெறுகிறாா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமாக இருந்த லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி சின்னசேலத்தைச் சோ்ந்த வே. மாதவன் (49) என்பவரை பிடித்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story