டெம்போ மீது பைக் மோதல் - மாணவன் உயிரிழப்பு
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் வேலை செய்கிறார். இவரது உறவினர் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் விக்னேஷ் (16) என்பவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிந்துள்ளார். நேற்று விக்னேஷும் ஹரிகரனும் திருச்செந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர்.
இந்த மோட்டார் சைக்கிள் நான்கு வழிச்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பக்கம் வந்த போது முன்னால் ஒரு டெம்போ சென்று கொண்டிருந்தது. அதை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி டெம்போவின் பின்பக்க டயரில் மோதியது. இதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இரவு விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிஹரன் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.