கேரளாவில் பறவை காய்ச்சல்: எல்லையில் கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து,
காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பரவலாம் என்பதால், இதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் படந்தா லுமூடு சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழி முட்டை மற்றும் கோழி தீவணங்களுடன் வரும் வாகனங்களை கண்காணித்து அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.