அந்தணர்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐய்யாறப்பர் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இதில், தருமபுர ஆதின கட்டளை விசாரனை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஐயாறப்பர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை 5.30 மணியளவில் ஐய்யாறப்பர், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும்,
நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம், திருமழபாடிக்கு செல்கின்றனர்.
திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நந்தி பார்த்தால் முந்தி கல்யாணம் என்கிற நம்பிக்கை நிலவுவதால், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.