காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு
காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, வளாங்குளம், தாண்டிக்குடி, மங்களங்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டெருமைகள் அடிக்கடி முகாமிட்டு பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது, இந்நிலையில் இன்று காலை வேளையில் பாச்சலூர் கரடிப்பாறை ஊசிக்கிணறு என்ற பகுதியில் முத்து (71) என்பவர் தனது தோட்டத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார்,
அப்போது விவசாய தோட்டத்திற்குள் திடீரென்று புகுந்த காட்டெருமை ஒன்று அவரை பலமாக தாக்கியது, இதில் பலத்த காயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது, தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராமத்தினர் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டெருமைகள் மனிதர்களையும் , விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் தாக்குவது வாடிக்கையாக உள்ளது, எனவே நிரந்தரமாக காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் காட்டெருமை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.