வைர பேனாவை தொலைத்த பாஜக கூட்டணி வேட்பாளர்
தேர்தல் பிரச்சாரம்
சிவகங்கை மக்களவை தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கல்வி கழக நிறுவனர் தேவநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் திருப்பத்தூருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகை தந்த, தேவநாதனுக்கு திருப்பத்தூரில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது காரில் இருந்து இறங்கிய வேட்பாளருக்கு பலரும் பொன்னாடைகள், மாலைகள் அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது சட்டை பையில் சொருகியிருந்த பேனா தொலைந்துள்ளது. இதனையடுத்து வேட்பாளரின் பேனாவை காணவில்லை எனவும், அதை கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்கவும் என்ற அறிவிப்பு செய்தனர். இதனையடுத்து அந்த பேனா, விலை உயர்ந்த வைரம் பதித்த பேனா எனவும், அவரது செண்டிமெண்ட் பேனா எனவும் கூறப்படுகிறது. வேட்பாளரின் பேனா காணவில்லை, கண்டு எடுத்தவர்கள் தரும்படி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.