ஊட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன்
நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன், இன்று ஊட்டியில் தனது பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதனிடம் வாழ்த்து பெற்றார். செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: தமிழை வைத்து தி.மு.க., அரசியல் செய்து வருகிறது. தமிழர் பண்பாடு, கலாச்சாரம் தமிழ் மொழியை உலக அளவில் எடுத்துச்சென்று தமிழ்மொழியை போற்றி வருபவர் நரேந்திர மோடி. தமிழர்களின் சோழர் பரம்பரையில் வைக்கப்பட்டிருந்த செங்கோல், அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கைத்தடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை கண்டுப் பிடித்து தமிழர்களை போற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எடுத்துச் சென்றது பிரதமர் நரேந்திர மோடி. இந்த செங்கோல் மற்றும் தமிழை வைத்து அரசியல் செய்வது ஸ்டாலின் மற்றும் இண்டி கூட்டணி தான். குன்னூர் பகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையின் போது தமக்கு அமல்க்கத்துறை சோதனை செய்ய வருவதாக அலைப்பேசி மூலம் தகவல் வந்ததாகவும், தான் எந்த அமல்க்கத்துறை சோதனைக்கும் அஞ்ச மாட்டேன் என்றும் கூறியிருந்தார். அதற்கு எல். முருகன், மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என பதிலடி கொடுத்தார்.
மேலும் ஆ.ராசா வின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் முறையாக சோதனை செய்யவில்லை, தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும், அவர்கள் வாகனத்தில் பல பெட்டிகள் இருந்துள்ளது அதனை மெத்தனமாக சோதனை. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சி என்று பாராமல் நேர்மையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பா.ஜ.க., வேட்பாளர் எல். முருகன், ஊட்டி மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, ஐந்து லாந்தர் பகுதியில் பிரசாரத்தை துவங்கினார்.