சேலத்தில் 19ந்தேதி பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டம்
பா.ஜ.கவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலத்திற்கு வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார்.
பா.ஜனதா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலத்திற்கு வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆய்வு செய்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்ட மைதானத்தை பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பொதுக்கூட்ட மேடை அமைப்பது, தொண்டர்களுக்கு இருக்கைகள், இதர வசதிகள் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில், சேலம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். பொதுக்கூட்டத்தில் கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்றார். சேலத்தில் பா.ஜனதா . பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பிரதமர் வருகை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.