பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய பாஜக நிர்வாகி கைது

பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய பாஜக நிர்வாகி கைது

பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் 

திருப்பூரில் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட புகாரில் பாஜக நிர்வாகி ஐயப்பன் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கூறி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் பாஜகவினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதோடு குமரன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீர் செய்ய முயன்ற காவலர்களை பாஜகவினர் தடுத்ததோடு காவலர்களை தரக்குறைவாக பேசி தாக்கவும் முற்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 284 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரிக்க முற்பட்டபோது விவரங்களை தர மறுத்து தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று திருப்பூர் வடக்கு போலீசார் செரங்காடு பகுதியில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பனை (45) கைது செய்தனர். காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐயப்பன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன் திரண்டனர். கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை காவல்துறையினர் கூறி அவர்களை கலைந்து போக செய்தனர்.

Tags

Next Story