தமிழ்நாட்டில் பா.ஜ.க., பெரிய கட்சி இல்லை - எஸ்.பி வேலுமணி

தமிழ்நாட்டில் பா.ஜ.க., பெரிய கட்சி இல்லை - எஸ்.பி வேலுமணி

 எஸ்.பி வேலுமணி 

தமிழ்நாட்டில் பா.ஜ.க., பெரிய கட்சி கிடையாது, எங்களுக்கும் தி.மு.க.,விற்கும் மட்டும் தான் போட்டி என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.பி வேலுமணி, நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சாலை, பூங்கா, மருத்துவம் என அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் கொடுத்தது அ.தி.மு.க., தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு இல்லை என்ற கோரிக்கையை வைத்திருந்தனர். ஆனால் இதுவரை தி.மு.க., எம்.பி ஆ. ராசா நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் பா.ஜ.க., பெரிய கட்சி கிடையாது, எங்களுக்கும் தி.மு.க.,விற்கு மட்டும் தான் போட்டி. நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமான திட்டங்களை கொடுத்தது அ.தி.மு.க., தான். அதனால் அ.தி.மு.க., சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்திலும் அதே போல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அ.தி.மு.க., தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசுகையில், "நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்து நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்று அங்குள்ள மக்களின் குறைகளை நாடாளுமன்றத்தில் தெரிவித்து நிதிகளை பெற்று தருவேன்," என்றார்.

Tags

Next Story