பேராவூரணியில் தென்னை பூங்கா அமைக்க பாஜக வாக்குறுதி
தேர்தல் அறிக்கை வெளியீடு
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கருப்பு முருகானந்தம் தஞ்சை மக்களவைத் தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை தயாரித்து அதனை நேற்று வெளியிட்டார். அதை பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் பெற்றுக் கொண்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு பூங்கா அமைக்கப்படும். வட்டங்கள் தோறும் வேளாண் உற்பத்தி பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர் பதனக் கிடங்கு அமைக்கப்படும். பாமினி ஆற்றை தூர்வாரி இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்படும். மதுக்கூர் பேருந்து நிலையம் சீரமைக்கப்படும்.
தென்னை மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகம் தஞ்சாவூரில் தொடங்கப்படும். பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் உள்ள உபகரணங்கள் சீர் செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். தஞ்சாவூர் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு பயணிகள் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொருட்களின் விற்பனையை உலகமெங்கும் கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். திருவையாறு - தஞ்சாவூர் - ராமேஸ்வரம் ஆன்மீக வழித்தட பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். மக்கள் கோரிக்கை மீது விரைந்து தீர்வு காணும் வகையில் நடமாடும் எம்பி அலுவலகம் மற்றும் முக்கிய இடங்களில் தொடர்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.