திருக்கோவிலூரில் பாஜகவினர் அத்துமீறல்
திருக்கோவிலூரில் பாஜகவினர் அத்துமீறல் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
திருக்கோவிலூர் பாரதிய ஜனதா கட்சியின் நகர செயலாளராக பத்ரி நாராயணன் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரண்டு பெண் நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் குளம் பகுதியில் வசிக்கும் பொது மக்களின் வீட்டிற்குச் சென்று அங்கு இருப்பவர்களிடம் தாங்கள் நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வருவதாகவும் தங்களுக்கு மத்திய அரசிலிருந்து வழங்கப்படும் சலுகைகள் பெற வேண்டும் என்றால் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் மொபைல் போன் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தங்களுக்கு மத்திய அரசிலிருந்து ஏதேனும் சலுகைகள் வருமோ என்ற ஆசையில் பொதுமக்களும் தங்களுடைய ஆதார் எண் மற்றும் மொபைல் போனை நிர்வாகிகளிடம் தந்துள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு நிர்வாகிகள் பிஜேபியில் இணைவதற்கான இலவச தொலைபேசி எண்ணை அழைத்து அவர்களை பிஜேபியில் இணைத்துள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி பிஜேபி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட சரல் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து அவர்களை உறுப்பினராக இணைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு தாங்கள் எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் , தாங்கள் நகராட்சி ஊழியர்களா?, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது தங்களுக்கு தெரியாதா?
அப்பாவி பொதுமக்களிடம் ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று பாஜகவில் இணைப்பது நியாயமா? போன்ற சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.