புதிய திராவிடர் கழகம் சார்பில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே புதிய திராவிடர் கழகம் சார்பில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே புதிய திராவிடர் கழகம் சார்பில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து புதிய திராவிடர் கழகம் நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் கூறியதாவது: கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நலச்சங்கம் மற்றும் புதிய திராவிடர் கழகம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் தலைமையில், அனைத்து சமுதாய தலைவர்களை ஒருங்கிணைத்து, கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் சார்பில் சமூக நீதி 5வது மாநாடு நேற்று ஈரோடு அருகே கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை திடலில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஆறு மாத காலமாக இந்த இடம் தூய்மை பணி உள்ளிட்ட பல வேலைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாநாடு மற்றும் ஆர்பாட்டங்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் அனுமதி வழங்கி வருகிறார்கள். சமூக நீதி ஆட்சியில், சமூக நீதி கூட்டணியில் இணைந்து செயல்படுகிற கட்சிகள், அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்துகிற சமூக நீதி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக வழக்கு தொடரப்பட்டது. பிப்.9ல் நடந்த வழக்கு விசாரணையில், பிப். 18ல், பெருந்துறை, பைபாஸ் சாலையில் விஜயமங்கலம் டோல்கேட் அருகே மாநாடு நடத்திக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. மாநாட்டிற்கு அனுமதி அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டுர், நல்லாம்பாளையம் உள்ளிட்ட பல கிராமப்பகுதிகளில் வீடுகளில், தெருக்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள். மேலும் கருப்பு கொடி ஏந்தியவாறு வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story