தஞ்சாவூரில் பார்வையற்ற மாணவர்கள் சாலை மறியல்: 45 பேர் கைது

தஞ்சாவூரில் பார்வையற்ற மாணவர்கள் சாலை மறியல்: 45 பேர் கைது

தஞ்சாவூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்

தஞ்சாவூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பார்வையற்றோருக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாணவ, மாணவிகள் 45 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களைக் கணக்கிட்டு அரசாணையைப் பின்பற்றி பார்வையற்றோருக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு செய்து, ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து முழுமையாக விலக்களித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும். வேலையில்லாதோருக்கான உதவி தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் சங்கத்தினரும், பட்டதாரிகள் சங்கத்தினரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக தஞ்சாவூர் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டு, பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பார்வையற்ற மாணவர்கள் செவ்வாய்க்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்து, பிற்பகலில் விடுவித்தனர்.

Tags

Next Story