ரயில்வே தொழிலாளியை தாக்கிய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை

ரயில்வே தொழிலாளியை தாக்கிய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பணியில் இருந்த ரயில்வே தொழிலாளியை காலணியால் அடித்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி இருப்புப்பாதை காவல் நிலையத்தை எஸ்ஆர்எம்யு சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பண்டிதன்பட்டி ரயில்வே கேட்டில் ராஜபாளையத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கேட் கீப்பர் வேலை செய்து வருகிறார்.இவர் பணியில் இருந்த போது ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட்டை அடைத்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த மல்லி பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ராஜா என்பவர் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் ஞானசேகரன் ரயில்வே கேட்டை திறக்காததால் ஆத்திரமடைந்த பால் வியாபாரி ராஜா அவரது காலில் அணிந்திருந்த காலினியை எடுத்து ஞானசேகரை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஞானசேகரன் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஞானசேகரனை கொலை வெறியுடன் தாக்கிய பால் வியாபாரி ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்,

தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தாக்கப்படுவதால் ரயில்வே காவல்துறையினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் ஒன்று கூடிய எஸ்ஆர்எம்யு சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story