மாட்டு வண்டிகளுக்கும் மணல் வழங்க கோரி முற்றுகை

மாட்டு வண்டிகளுக்கும் மணல் வழங்க கோரி முற்றுகை

மாட்டு வண்டி உரிமையாளர்கள் முற்றுகை 

மோகனூர் அருகே ஆற்று மணல் கேட்டு மாட்டு வண்டி உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து மணலை அள்ளி குமரிப்பாளையம் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டு பின்னர் கனரக வாகனங்களான லாரிகளுக்கு இணையதள சேவை மூலம் மணல் வழங்கப்படுகிறது. இதனை புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.இந்த நிலையில் லாரிகளுக்கு வழங்குவது போல் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு இணைய தளம் மூலம் மணல் வழங்க வேண்டும் எனக்கூறி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் அரசு மணல் கிடங்கு நுழைவாயில் முன்பு மாட்டு வண்டிகள், மாடுகளை நிறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அரசு மணல் குவாரியில் இருந்து மாட்டுவண்டி களுக்கு மணல் வழங்க அனுமதி உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு அளித்ததாகவும் அதன் அடிப்படையில் மணல் வழங்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்யலாம் என கூறியுள்ளதால் மணல் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். மாட்டுவண்டி போராட்டம் குறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆற்று மணல் கேட்டு மாட்டு வண்டி உரிமையாளர்கள் அரசு மணல் கிடங்கினை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த அரசு மணல் கிடங்கில் இணையதளம் மூலம் மணல் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story