சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி!

சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி!

படகு போட்டி

ஊட்டி படகு இல்லத்தில் நடைபெற்ற படகு போட்டியை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதமான காலநிலையை அனுபவித்தவாறு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, நாய் கண்காட்சி போன்றவைகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழக சுற்றுலா துறை சார்பாக நடத்தபட்ட படகு போட்டியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மிதி படகுகளில் தம்பதியர்களுக்கான போட்டி, பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் படகு ஓட்டிகளுக்கான துடுப்பு படகு போட்டிகள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் தம்பதியர்களுக்கான மிதி படகு போட்டியில் திருப்பூரை சேர்ந்த அலெக்சாண்டர் -லதா மேரி தம்பதி முதலிடத்தை பிடித்தனர். ஆண்கள் இரட்டையர் மிதி படகு போட்டியில் அருள்மணி, சண்முகசுந்தரம் ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் ராஜஸ்ரீ, சுசிலா ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கரகாட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

Tags

Next Story