நாகையில் மீனவர்களிடையே படகு பேரணி

நாகையில் மீனவர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி படகு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19- ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகையில் மீனவர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி படகு பேரணி நடைபெற்றது. பேரணியினை நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்டம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த ஹர்ஷ் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்திய கடற்படை அலுவலகம் எதிரே தொடங்கிய பேரணியானது, கடுவையாற்று வழியாக நாகை மீன்பிடி துறைமுகத்தை சென்றடைந்தது. 100 சதவீதம் தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற பதாகைகளை படகில் சென்றவர்கள் கையில் ஏந்தியபடி நின்றனர். அதேபோல தேர்தல் ஆணையத்தின் முத்திரை பதாககைகளை கையில் பிடித்தபடி பைபர் படகில் மீனவர்கள் அணிவகுத்து சென்றனர். இதைத்தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் தேர்தல் விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் வழங்கினர். தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நாகையில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் 4 விசைப்படகுகள், 6 பைபர் படகுகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட படகுகள் பேரணியில் பங்கேற்று அணிவகுப்பாக சென்றது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், மீன்வளத்துறை, தேர்தல் அதிகாரிகள், மீனவ பஞ்சாயத்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story