குமரியில் கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.
