ஆண்டிபாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி தொடக்கம்

ஆண்டிபாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி தொடக்கம்

ஆண்டிபாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி தொடக்கம்- சுற்றுலாத்துறை அதிகாரி தகவல்

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் ஆண்டிபாளையம் குளத்தை சுற்றுலா தளமாக மேம்படுத்தி படகு சவாரி, நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம் அமைப்பதற்கு கடந்த 2022-23 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்து 2023 ஏப்ரல் மாதம் முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்டிபாளையம் குளக்கரை பகுதியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டிபாளையம் குளக்கரை பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆய்விற்கு பின்னர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக எதுவும் இல்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கினை ஏற்று திருப்பூர் மக்களின் நன்மை கருதி திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ்(சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் முடிவுற்று திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் அமையும்.

ஆண்டிபாளையம் குளம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் முதற்கட்ட வளர்ச்சிப் பணிகள் முடிவுற்றது. படகு இல்லம் அமைக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஆண்டிப்பாளையம் குளம் பகுதியில் மேலும் என்னென்ன சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தலாம் என்று சுற்றுலா திட்ட நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் படகு சவாரி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் முரளிதரன் , திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு சங்க தலைவர் குளோபல் பூபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story