கரும்பு பயிரில் பொக்கா போயிங் தாக்குதல் - கட்டுப்படுத்தல் முகாம்

கரும்பு பயிரில் பொக்கா போயிங் தாக்குதல் - கட்டுப்படுத்தல்  முகாம்

 பொக்கா போயிங் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு  

விவசாயிகள் கரும்பு பயிரில் பொக்கா போயிங் நோயை கட்டுப்படுத்துவது குறித்து, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிரில் பொக்கா போயிங் என்ற இலை சுருட்டு அழுகல் நோயின் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. இந்த நோயை சரியான தருணத்தில் கட்டுப்படுத்தாமல் காலம் தாழ்த்தினால், கரும்பு சாகுபடியில் மகசூல் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகள் உரிய தருணத்தில் இதற்கான மேலாண்மை முறைகளை பயன்படுத்தி நோயின் தாக்குதலை கட்டுப்படுத்திட வேண்டும். இந்த நோய் பூஞ்சாணங்கள் மூலம் ஏற்படுகிறது.

பெரும்பாலும் பருவ மழை காலங்களில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்த நோய் சமீப காலமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில், நல்ல கோடை மழையை தொடர்ந்து இரவு வெப்பநிலை குறைவாக இருக்கும் காலங்களிலும் பயிருக்கு சேதத்தை விளைவிக்கிறது. இந்த நோய் விதைக்கரணைகள் மூலமாக முக்கியமாக பரவுகிறது. மேலும் சாதகமான சூழ்நிலையில் காற்று, மழைநீர் மற்றும் பயிருக்கு பாயும் நீரின் வழியாகவும் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் 3 முதல் 7 மாதங்கள் வரையிலான பயிர்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்ப நிலையில் நோய் தாக்கிய இலைகளின் அடிப்பாகம் (தண்டுடன் ஒட்டிய பகுதி) வெளிர் மஞ்சள் நிறமாக மாறி காட்சியளிக்கும்.

மேலும் இலையின் மேற்பகுதி சுருண்டு முறுகிய நிலையில் காணப்படும். இந்த நிலைது கரும்பின் வளர்ச்சியை வெகுவாக பாதித்து மகசூலை குறைத்து விடும். இந்நிலையில் குருத்து முழுவதும் அழுகி காய்ந்து கருப்பு நிறமாக மாறிவிடும். பின்பு பக்கவாட்டில் உள்ள முளைப்புகள் முளைக்க ஆரம்பிக்கும். எனவே கரும்பு விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகங்களை அனுகி இந்த பொக்கா போயிங் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, சர்க்கரை ஆலை, வேளாண் அறிவியல் நிலையம், கரும்பு ஆராய்ச்சி நிலையம் கோயம்புத்தூர் மற்றும் சிறுகமணி விஞ்ஞானிகளைக் கொண்டு கரும்பு பயிரில் பொக்கா போயிங் என்ற இலை சுருட்டு அழுகல் நோயினை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. நாளை 7ம் தேதி பள்ளிபாயைம் ஏமப்பள்ளியிலும், 8ம் தேதி மோகனூரிலும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story