புத்தக திருவிழா எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சிறப்புரை

விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது விருதுநகர் புத்தக திருவிழா-2023 2ம் நாள் கலை இலக்கிய அரங்கு நிகழ்ச்சியில், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் "வாசிப்பின் வாசல்கள்;” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழக அரசு புத்தக வாசிப்பிற்காக ஒரு புதிய முயற்சியை இந்த புத்தக திருவிழாக்கள் மூலம் ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தை வாசிப்பதற்கு நம்முடைய புத்தகங்கள் உதவ வேண்டும்.

நூலக கதை புத்தகங்களை நம் குழந்தைகள் எவ்வாறு வாசிக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் புத்திசாலியாக உருவாகிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை நாம் பார்க்கின்றோம். கல்வியானது எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொள்வதற்கான துணிச்சலை தர வேண்டும்.

அதற்கு புத்தகங்கள் மூலம் நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் ஏற்படும் மாணவர்களுக்கு இடையேயான சாதி மத மோதல்களை களைய வேண்டும் என்றால் பெற்றோர்களும் பெரியவர்களும் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டினையும் அறிவார்ந்த இடமாக மாற்ற வேண்டும். அறிவார்ந்த உரையாடல்களை நடத்த வேண்டும். அதற்கு பெற்றோர்கள் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். தற்போது கைபேசிகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

நம்முடைய மனித இனத்தின் வரலாறு என்ன நம்முடைய மூதாதையர்கள் யார் என்று பார்க்கும்போது நாம் ஆப்பிரிக்காவில் குரங்கு இனத்தில் இருந்து அங்கிருந்து வெளியேறி உலகின் பல்வேறு இடங்களுக்கு பெயற்;சியானவர்கள் என்பது உண்மை. இதுபோல் நம் மனித இனம் அனைவருமே ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு மனித குரங்கிடமிருந்து உருவானவர்கள் என்பதை நம் கல்வி முறைகள் கற்றுக் கொடுக்கும் போது நம்முடைய ஜாதி மத வேறுபாடுகளை களையலாம்.

நம்முடைய தவறான சமூக கற்பனைகளை புத்தகத்தின் வாசல்கள் மூலம் சென்று பார்க்கும் போது நமக்கு சரியான புரிதல்கள் ஏற்படுகிறது. பள்ளி பாட புத்தகங்களால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது என அறிந்து, அந்த இடைவெளியை போக்கவே தமிழக அரசு இதுபோன்ற புத்தக திருவிழாக்களையும், வாசிப்பு இயக்கங்களையும் முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்தார்.

Tags

Next Story