தாயை துன்புறுத்திய தந்தையை வெட்டி கொன்ற சிறுவன் கைது

பைல் படம்
தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் அழகுதுரை மகன் சத்திய மூர்த்தி (36). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுசியா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சத்திய மூர்த்தி தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி அனுசுயாவை அடித்து துன்புறுத்துவதுடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியை அடித்து துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவரது மூத்த மகனான 14 வயது சிறுவன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தையை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மது போதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து சிறுவன் தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
