இசை கலைஞர்கள்  சென்ற வேன் விபத்து - 17 வயது  சிறுவன் உயிரிழப்பு

இசை கலைஞர்கள்  சென்ற வேன் விபத்து  - 17 வயது  சிறுவன் உயிரிழப்பு

பலியான சிறுவன் 

ராஜாக்கமங்கலம் அருகே இசை கலைஞர்கள்  சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் பேரின்ப தாஸ் இவரது மகன் கானான் (27). இவர் நேற்று காலை புத்தளம் பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மேளம் அடிப்பதற்காக தனது வேனில் திங்கள் நகரில் இருந்து 11 பேருடன் புறப்பட்டு சென்றனர். ராஜாக்கமங்கலம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ஓட்டுனர் கானான் மற்றும் மேக்கோடு இலந்தைவிளை பகுதியை சேர்ந்த சூசை மிக்கேல் மகன் ஜெரின் (17) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து ஜெரின் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெரின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன ஜெரின் தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தார். விடுமுறை நாட்களில் மேளம் அடிக்கச் செல்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில் நேற்று விபத்தில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

Tags

Next Story