மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - உறவினர்கள் சாலை மறியல்

ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்ததிற்கு ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகன் லிங்கேஸ்வரன் (வயது 9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை சிறுவன் தனது நண்பர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, கிரிக்கெட் பந்தை சிறுவன் லிங்கேஸ்வரன் எடுக்க சென்றபோது, அருகில் இருந்த ஊராட்சி டேங்க் மற்றும் கழிவறை போன்றவைக்கு சப்ளை செய்யும் மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சிறுவன் மயங்கி விழுந்தான். இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே சிறுவன் லிங்கேஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் சிறுவனின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்வதாக கூறி எடுத்து சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் சிறுவனின் உடலுடன் செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலத்தின் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஊராட்சி சார்பில் வைத்திருக்கும் மின்சார வயர் பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக கூறி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஊராட்சி தலைவர் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் முத்துநாயக்கன்பட்டியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். சிறுவன் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story