நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி

அப்துல்லா

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி திருவரங்கம் நகரை சேர்ந்தவர் அப்துல்அஜீஸ் மகன் அப்துல்லா,16; தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏமப்பேர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது, அப்துல்லா தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கிணற்றில் இறங்கி, பாதாளசுரடு பயன்படுத்தி அப்துல்லாவை தேடினர். கிணற்றில் 60 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால், அப்துல்லாவை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். இரவு 9:00 மணிக்கு மேலாகியும் அப்துல்லாவை மீட்க முடியவில்லை. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், தண்ணீருக்குள் கேமிராவை செலுத்தும் தொழில்நுட்பத்தை நாமக்கல்லில் இருந்து வரவழைத்தார். இரவு 10.30 மணியளவில் தண்ணீருக்குள் கேமிராவை செலுத்தி, அப்துல்லாவின் பிரேதம் கிடக்கும் இடத்தை கண்டறிந்தனர். தொடர்ந்து பாதாளசுரடு மூலம் அப்துல்லாவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story