டிஎன்ஏ டெஸ்டில் உறுதியாகியும் திருமணம் செய்ய மறுத்த காதலன்: பெண் தர்ணா
தர்ணாவில் ஈடுபட்ட பெண்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா (20),. ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே தாய் அனிதா இறந்துவிட்டார். தந்தை கருணாகரனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நல குறைவால் இறந்து விட்டார்.
ஹரிப்பிரியா தனது பெரியப்பா பாஸ்கரன் ஆதரவில் இருந்து வந்தார். இந்நிலையில் பக்கத்து கிராமமான வலச்சேரிக்காடு கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் மகன் பிராகஷ் என்பவரை, ஹரிப்பிரியா காதலித்து வந்துள்ளார். இதில் நெருக்கம் உருவான நிலையில் ஹரிப்பிரியா கர்ப்பமாகினார்.
ஆனால் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன்.22 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்சூழலில், பிறந்த குழந்தை, தனக்கு பிறந்ததல்ல எனக் கூறி ஹரிப்பிரியாவை விட்டு பிரகாஷ் விலகி வந்துள்ளார். இதுகுறித்து ஹரிபிரியா பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
புகாரின் பேரில், காவல் துறை வழக்குப் பதிவு செய்து டி.என்.ஏ., டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து டி.என்.ஏ., டெஸ்ட் எடுத்த போது பிறந்த குழந்தையின் டி.என்.ஏ., பிரகாஷின் டி.என்.ஏ.,யுடன் ஒத்துப்போனதால், பிரகாஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரகாஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த ஹரிப்பிரியா சனிக்கிழமை பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தின் முன்பு, பிரகாஷை திருமணம் செய்து வைக்கக்கோரி, தனது கைக்குழந்தையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஹரிப்பிரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரகாஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பிறகு, ஹரிப்பிரியா காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டார். இதனால் மகளிர் காவல் நிலையம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.