நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலைய மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளின் கீழ், நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்று. மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் வீற்றுள்ளார். திருமண தடை, ராகு - கேது தோஷ பரிகார சிறப்பு பெற்றது. இக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, அங்குரார்ப்பணம் வழிபாடு நடந்தது. நேற்று காலை, நித்ய பூஜைக்கு பின், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன், தோளுக்கு இனியான் சேவையில் மஹா மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடந்தது. பின், 6:30 மணிக்கு, அவர் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அவர், கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்கி வழிபாடு நடைபெற்று, 07:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின், சுவாமி சக்கரத்தாழ்வாருடன் வீதியுலா சென்றார்.
மாலை திருமஞ்சனம் நடந்து, இரவு, சுவாமி அன்னவாகன சேவையாற்றி, வீதியுலா சென்றார். பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், நேற்றைய உற்சவங்களை கட்டளை உபயமாக நடத்தினர். மே 2ம் தேதி வரை, தினசரி காலை, இரவு, உற்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் உற்சவமாக, வரும் 27ம் தேதி, சுவாமி கருட வாகன சேவையாற்றுகிறார். ஏழாம் நாளான வரும் 29ம் தேதி, திருத்தேரில் சுவாமி உலா செல்கிறார். மே 2ம் தேதி, தெப்போற்சவம் நடக்கிறது