காஞ்சியில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கோலாகலம்
திருவிழா கோலாகலம்
மலர் அலங்காரத்தில் அஞ்சனாட்சியுடன், மணிகண்டீஸ்வரர் தேரில் எழுந்தருளினார் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிப்., 15ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார். இந்த பிரம்மோற்சவத்தின், 7வது நாளான நேற்று, காலை 8:30 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அஞ்சனாட்சியுடன், மணிகண்டீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ஓம் நம சிவாய என, கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், காலை 11:00 மணியளவில், தேரடிக்கு வந்தடைந்தது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். அதன்படி ஏழாம் நாள் உற்சவமான நேற்று காலை, மரத்தேர் உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். காஞ்சிபுரம் சங்கரமடம் முன், மண்டகப்படி உற்சவம் நடந்தது. இதில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் துாபதீப மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை பத்ரபீடமும், நாளை இரவு 8:00 மணிக்கு பிரபல உற்சவமான வெள்ளி தேரோட்டமும் விமரிசையாக நடக்க இருக்கிறது. குன்றத்துார் முருகன் கோவிலில், பிப்., 15ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, முருகனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மலையின் மேல் இருந்து பல்லக்கில் மலையின் கீழ் வந்த முருகன், தேரில் பிரதான வீதிகளில் வலம் வந்தார்.
Next Story