மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் இளவரசன் (45) பிப்ரவரி 26 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு செவ்வாய்க்கிழமை மூளைச் சாவு ஏற்பட்டது.
இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதன் அடிப்படையில், இளவரசனின் இரு சீறுநீரகங்கள், கல்லீரல், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. இதில், ஒரு சிறுநீரகம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தோல் வங்கிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, இளவரசனின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், கோட்டாட்சியர் செ.இலக்கியா அரசு மரியாதை செலுத்தினார். மேலும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர். பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரீஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதன் மூலம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 ஆவது உடல் உறுப்புகள் தானமும், 14 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.