கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை
பைல் படம்
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள எம்.தங்கம்மாள்புரம் பள்ளிக்கூடத் தெருவில் இசக்கியம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினந்தோறும் மாலையில் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த சுப்பையா (வயது81) என்பவர் பூசாரி ஆக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழிபாடு முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
பின்பு நேற்று மாலையில் அவர் கோவிலுக்கு வந்த போது, கதவு மற்றும் உண்டியலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவில் அருகில் இருந்த வேலாயுதத்தை பிடுங்கிய மர்ம நபர்கள், அதனை அந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் நட்டு வைத்து விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து பூசாரி முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உடைக்கப்பட்ட உண்டியலில் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.