வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை


திருவெறும்பூர் கக்கன் காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜி நிஷா (56). இவர் நேற்றிரவு அருகில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர் உடனடியாக திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அதே போல் மோப்ப நாய் நிலா சம்பவ இடத்தில் இருந்து அருகிலுள்ள ரயில்வே தண்டவாளம் வரை சிறிது தூரம் ஓடி நின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


