பழுதடைந்த பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பறைகட்டிடங்கள் - மாணவர்கள் மற்றும் பெற்றார் புகார்!
திருப்பூர், பாண்டியன் நகரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி பழுதடைந்த பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டிடங்கள், தண்ணீர் வசதியில்லாமல் அவதியுறுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2ம் மண்டலம், 2 வது வார்டு பாண்டியன் நகர் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் குடிநீர், கழிப்பறை வசதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய வேளையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் கை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர் என புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு பயிலும் மாணவ, மாணவியர்க்கு என தனித்தனியாக கழிவறைகள் உள்ளன. ஆனால் முற்றிலும் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அருகே உள்ள மறைவிடங்களுக்கும், மாணவ, மாணவியர் திறந்தவெளி மைதானத்துக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறை செல்லவே சிரமப்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இப்பள்ளி சுற்றுசுவரும் மோசமான நிலையில் உள்ளது. சுவர் பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளதாகவும், எனவே எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ள பள்ளி கழிப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றை புதுப்பித்து உரியளவில் தண்ணீர் வழங்கி மாணவ, மாணவியர்களின் சிரமங்களை குறைக்க வேண்டுமென மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Next Story