நிலப்பிரச்னையில் தம்பி அடித்துக்கொலை; அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
பைல் படம்
பாபநாசம் அருகே நிலப் பிரச்னையில் தம்பியை கடப்பாரையால் தலையில் அடித்து படுகொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து குடந்தை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். பாபநாசம் தாலுகா புத்தூர் குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன். இவரின் மகன் ரமேஷ் (45).
இவருக்கு மனைவி கார்த்திகா மற்றும் 3 மகன்கள் உள்ளனர். ரமேஷின் அண்ணன் பாஸ்கர் (62). இவர், ரமேஷின் மாடி வீட்டின் கீழ்வசித்து வருகிறார். தந்தை முத்தையன் வீரமாங்குடி பள்ளியில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பெயரில் உள்ள நிலங்களில் சகோதரர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்தனர். தந்தை முத்தையனின் பென்ஷன் மற்றும் விவசாயம் மூலம் கிடைக்கக்கூடிய தொகையை எடுத்துக்கொள்வதில் தம்பி ரமேஷ், அண்ணன் பாஸ்கர் ஆகியோருக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிச.23 ஆம்தேதி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரமேஷின் தலையில் அண்ணன் பாஸ்கர் கடப்பாரையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். இதுபற்றி கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனர். இவ்வழக்கு குடந்தை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (30ம்தேதி) நீதிபதி ராதிகா வழக்கை விசாரித்து, பாஸ்கருக்கு (62), ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.