ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயார் செய்யப்படும் காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்காக கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 2-ஆம் தேதி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற ஜனவரி மாதம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் தச்சங்குறிச்சி, கந்தர்வக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருபவர்கள் தங்களது காளைகளுக்கு வாடிவாசல் அமைத்தும் பாய்ச்சல் காட்டியும், சீறிபாய வைத்தும் குளத்தில் நீச்சல் அடிக்க வைத்தும், பல்வேறு பயிற்சிகள் அளித்து தயார் நிலையில் உள்ளனர்.

அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளை மல்லுக்கட்டும் காளையர்கள் ஜல்லிக்கட்டு காளைகளின் திமிலை பிடித்து மல்லுக்கட்டி பயிற்சி எடுத்தும் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் திருச்சி தஞ்சை சிவகங்கை மதுரை சேலம் திண்டுக்கல் நாகை அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று வருகின்றன.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் இரண்டு முறை தேதி மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 8-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஜல்லிக்கட்டு காளைகள் திருப்பி அனுப்பப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் காளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இம்முறை ஜனவரி இரண்டாம் தேதி குறித்த நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்போர் காளையர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story