வீட்டுக் கதவை உடைத்து துணிகர கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் ,வெள்ளமடம் ஒன்றாவது தெரு ஸ்ரீ குமரன் நகர் பகுதி சேர்ந்தவர் இசக்கி ராஜா (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கேரளா, குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணவில்லை.
இது பற்றி அவர் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பீரோவில் இருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.