மலை பாதையில் பேருந்து விபத்து - 3 பேர் படுகாயம்.
விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையொட்டி தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிய துவங்கியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் இருந்து சுற்றுலா மினி பேருந்தில் 25 பேர் உதகையை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் மாலை உதகையில் இருந்து மேட்டுபாளையம் செல்ல குன்னூர் மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னூர் அடுத்த பர்லியார் அருகே சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் பின்னர் கொஞ்ச தூரம் தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்த டிரைவர் ராஜா (வயது 35) உட்பட 3 பேரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மீதமுள்ளவர்கள் லேசான காயத்தோடு உயிர்த்தப்பினர். கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் வந்த பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றும் ஒரு சுற்றுலா மினி பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.