பேருந்து நிறுத்த கட்டுமான பணிகளில் மந்தம் - பயணிகள் கவலை.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் சந்திப்பு சேலம், பெங்களூர், பெரம்பலூர், விழுப்புரம், சென்னை,சமயபுரம், லால்குடி, அரியலூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சந்திப்பு பகுதியாகும். இந்த பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டாலும், சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.நம்பர் 1 டோல்கேட் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பகுதியாகும்.பேருந்து நிறுத்தம் கட்டுவதில் ஏற்படும் காலதாமதத்தால் தினமும் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கிய போதிலும், சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மழை பெய்து வருகிறது. பேருந்து நிறுத்தம் இல்லாமல், உட்கார இடமின்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இங்கு காத்திருக்க வேண்டியுள்ளது என்கின்றனர்.இதே வழித்தடத்தில் கிராமங்களுக்குச் செல்லும் பல உள்ளூர் பேருந்துகளும் இங்கு நிற்கின்றன. புதிய நிழற்குடை கட்டுவதாக கூறி, ஏற்கனவே இருந்ததை அதிகாரிகள் இடித்து தள்ளினர். அவர்கள் தூணை மட்டுமே அமைத்தனர், அதன் பிறகு பணிகள் நடைபெறவில்லை. வெயிலிலும், மழையிலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.விரைவில் பணிகள் முடிக்கப்படும் என ஊரக நலத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.