பஸ் டயர் பஞ்சர்; திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு.
திருவள்ளூர், ராஜாஜி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்குன்றம், திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறி, ராஜாஜி சாலை, வீரராகவர் கோவில் அமைந்துள்ள தேரடி மற்றும் குளக்கரை தெரு வழியாக செல்கின்றன. பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி வரை சாலை குறுகலாக இருப்பதால், தினமும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில், செங்குன்றத்திற்கு, தடம் எண்: 505 என்ற அரசு மாநகர பேருந்து, புறப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து, 20 மீட்டர் துாரம் செல்வதற்குள், மாநகர பேருந்தின் இடது பக்க டயர் பஞ்சராகி நடுவழியில் நின்றது. இதனால், பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை, திருவள்ளூர் தேரடியில் உள்ள வீரராகவர் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்திற்கு வந்தவர்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார், பேருந்து நிலையத்தில் இருந்து காக்களூர் ஏரிக்கரை செல்லும் சாலை வழியாக வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். அதன் பின், மாநகர பேருந்தின் டயர் மாற்றப்பட்டு அங்கிருந்து, கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக, நேற்று காலை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.