நாகையில் தொழில் கடன் முகாம்
நாகப்பட்டினம் மாவட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் கடன் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர்.பேபி தலைமையில் நடைபெற்றது இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியதின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் (Loan Mela) ஒவ்வொரு காலாண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த காலாண்டிற்கான கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் (Loan Mela ) இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கையின்படி மொத்தம் ரூ.7,00,033.75 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,77,011 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மட்டும் தொழிற் கடனுக்கு ரு.487.52 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர வேளாண் கடன் இலக்காக ரூ.4,186.66 கோடி, கல்விக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கு ரூ.85.52 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழிற்கடன் இலக்கில் டிசம்பர் 2023 வரை ரூ.289.95 கோடி அதாவது 59.66 சதவீதம் இலக்கை நாகப்பட்டினம் மாவட்டம் அடைந்துள்ளது.
மீதமுள்ள இலக்கினை இந்த இறுதிகாலாண்டிற்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடன் மேளாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தொழிற்கடனுக்காக நிரணயிக்கப்பட்ட இலக்கான ரூ.50 கோடியில் இன்று வரை ரூ.57.25 கோடி அளவிற்கு இலக்கு எய்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட தொழில் மையம் மூலம் 88 பயனாளிகளுக்கு ரூ.503.69 இலட்சம் அளவிற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தாட்கோ, ஆகிய துறைகள் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.122.093 இலட்சம் அளவிற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மகளிர் திட்டம் மூலமாக 810 குழுக்களுக்கு ரூ.51.00 கோடி மதிப்பில் தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்களை ஆரம்பிக்க மற்றும் மேம்படுத்த இந்த தொழிற்கடன்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில்,
அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம். வாழ்ந்துகாட்டுவோம் மற்றும் பிற அரசுத்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. இவ்வசதிகளை தொழில் தொடங்க விரும்புபவர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளார்களின் மாநாட்டின் மூலம் நமது மாவட்டத்தில் 90 தொழில்முனைவோர்கள் மூலம் ரூ.339.69 கோடி அளவிற்கான முதலீடுகள் மற்றும் இதன் மூலம் 3168 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும் மக்களுடன் முதல்வர் மற்றும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் போன்ற திட்டங்கள் மூலம் மக்களை நேடியாக அணுகி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் அரசு நிர்ணயித்துள்ள இலக்கினை எய்திட பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் தாரிக் எம்.சையது, திட்ட இயக்குநர்மகளிர் திட்டம்) முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் வேல்முருகன்,
நாட்கோ மாவட்ட மேலாளர் திரு.சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.செந்தில்குமார், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர்(தொழில்கள்) அஜய் விக்னேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.