மாலை நேர மழையால் சாலையோர கடை வியாபாரிகள் தொழில் பாதிப்பு !!

மாலை நேர மழையால் சாலையோர கடை வியாபாரிகள் தொழில் பாதிப்பு !!

மழை

தினமும் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் அதிகளவு செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் மாலை 5 மணிக்கு மேல் பாணி பூரி கடைகள், சில்லி சிக்கன் சென்டர் ,பாஸ்ட்புட் உணவகங்கள், தட்டுவடை செட் கடைகள், சாலையோர உணவகங்கள் ,துரித உணவு கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் தினந்தோறும் இயங்கி வருகிறது.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், மே மாத துவக்கத்திலேயே வெயில் முற்றிலுமாக தளர்ந்து ,சீதோசன நிலை மாறுபாடு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது .

இதன் ஒரு பகுதியாக கடந்த 19-ஆம் தேதி முதல் இடைவிடாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை நேரத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக வியாபார பாதிப்பு ஏற்படுவதாக கடை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குமாரபாளையம் சாலையில் துரித உணவகம் நடத்தி வரும் ஆறுமுகம் என்பவர் கூறும் பொழுது ,ஆரம்ப காலகட்டத்தில் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் அந்தத் தொழிலில் போதுமான வருவாய் இல்லாததால் சாலையோர துரித உணவு வழங்கும் கடையை அமைத்து, கடந்த சில மாதங்களாக தொழில் நடத்தி வருகிறேன். இந்நிலையில் மே மாத துவக்கத்தில் இருந்தே, அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், மாலை நேரங்களில் பெரிய அளவிற்கு மழை இல்லாததால் தொழில் பாதிப்பு ஏற்படாத நிலை இருந்து வந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மாலை நேரங்களில் பெய்யும் மழையானது தொடர்ந்து பெய்கிறது . சரியாக வியாபாரம் ஆரம்பிக்கும் நேரம் இரவு ஏழு முதல் எட்டு மணிக்குள்ளாகவே மழை பெய்யத் துவங்கி விடுவதால், வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் மழையின் காரணமாக கடைக்கு வருவதில்லை.

இதனால் அன்றாட வருவாய் கொண்டு பொருட்களை வாங்கி போட்டு தொழில் நடத்தி வரும் நிலையில் ,உரிய வாடிக்கையாளர்கள் வராததால் உணவுப் பொருட்கள் வீணாகிறது. மழையின் தாக்கத்தின் காரணமாகவும் கடையை நடத்த முடியாத நிலை ஏற்படுவதால் , கடந்த சில தினங்களாக கடைக்கு விடுமுறை விட்டு உள்ளேன்.

மழை பாதிப்புகள் ஓரளவு குறைந்த பிறகு கடையை திறக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். வாரந்திர காய்கறி கடை வைப்பவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது மழை பெய்யும் நேரங்களில் காய்கறிகள் நீரில் அடித்துச் செல்லும் அவலமும் ஏற்படுகிறது. நான் மட்டுமல்லாமல் என்னோடு சார்ந்திருக்கும் பலருக்கும் இதே போன்ற பாதிப்பு இருந்து வருகிறது. ஓரிரு நாளில் நிலைமை சரியாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்...

Tags

Next Story