10 ரூபாய் நாணயங்களை வாங்குங்கள்: கலெக்டர் அறிவுறுத்தல்
வேலூர் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி வாங்கலாம் என ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பொதுமக்களின் வசதிக்காக அதிகளவில் 10, 20 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. இந்த நாணயங்கள் செல்லாது என்று பொதுமக்கள், வியாபாரிகள் இடையே வதந்தி பரவி உள்ளது. அதனால் 10, 20 ரூபாய் நாணயங்களை சில வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது வதந்தியாகும். அவை செல்லுபடியாகும். அனைத்து வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்த நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.